சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்த திமுக தலைமை குழு ஒன்றை அமைத்துள்ளது.
மேலும், தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து வருகின்றன. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டிஆர்பி ராஜா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் தனிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பை அடுத்து, திமுகவினர் உற்சாகத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் களப் பணிகளைத் தொடங்கி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், தலைவர்களின் பிரசாரப் பயணங்கள் என அனைத்து ஏற்பாடுகளும் திமுகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.