சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் பயனடையும் வகையில் குறு, சிறு, தொழில் துறையில் ரூ.63,000 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரான அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இது சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.
புதிய முதலீடுகள் மூலம் சுமார் 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், உலகளவில் தமிழகத்தை புதுத்தொழில்களின் மையமாக மாற்றவும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ என்ற துறையை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் அன்பரசன் கூறினார்.
“நாட்டில் முதல்முறையாக, சமூகத்தில் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்பதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது.
“இந்த ஆண்டில் அது ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டது. இதுவரை 21 தொழில் முனைவோருக்கு ரூ.28.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 153 நிறுவனங்களுக்கு ரூ.42.05 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் அன்பரசன்.
கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் அவற்றை சந்தைப்படுத்தவும் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம்முதல் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 266 பேருக்கு ரூ.7.39 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ‘ஸ்டார்ட் அப்’ தனிக் கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது,” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.