28 ஆண்டுகள் நாட்டுக்கு சேவையாற்றிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

28 ஆண்டுகள் நாட்டுக்கு சேவையாற்றிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

2 mins read
5e94cc21-55f6-417f-bf53-fa93e9254d64
ஊர் மக்கள் அளித்த சிறப்பான வரவேற்பு. இத்தகைய வரவேற்பை தாம் எதிர்பார்க்கவில்லை என்கிறார் கண்ணன். (உள்படம்: கண்ணன்) - படங்கள்: ஊடகம்

திண்டுக்கல்: கடந்த 28 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பின்னர், ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் (70 வயது), கருப்பாயம்மாள் தம்பதியர்க்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மூவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். மூன்று பேரில், மூத்த மகன் கண்ணன் தனது 19வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், அண்மையில் ஊர் திரும்பினார்.

நீண்ட காலமாக நாட்டுக்குச் சேவையாற்றி வந்த ராணுவ வீரர் ஊர் திரும்புவதை அறிந்த கண்ணனின் உறவினர்களும் கிராம மக்களும் அவருக்கு மேளதாளம் முழங்க விமரிசையாக வரவேற்பு அளித்தனர்.

ஆங்காங்கே அரசியல் தலைவர்களுக்கு வைப்பது போன்ற பிரம்மாண்ட பதாகைகள் வைத்து, பட்டாசுகள் வெடித்து கண்ணனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஊருக்குள் நுழைந்ததும் கண்ணனுக்கு மாலை அணிவித்து, சில இளையர்கள் அவரை தோள்களில் தூக்கி வந்தனர்.

இத்தகைய வரவேற்பை சற்றும் எதிர்பாராத கண்ணன், அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது ராணுவப் பணியில் எதிர்கொண்ட சவால்களை விவரித்தார்.

“கார்கில் போரின்போது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிய அனுபவத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. பல்வேறு தருணங்களில் நான் சிறப்பாக பணியாற்றியதாக மேலதிகாரிகள் கௌரவித்துள்ளனர்.

“நாட்டுக்காகப் பணியாற்றியபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு இணையாக ஊர் மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு அமைந்தது,” என்று சொல்லும் கண்ணனுக்கு, மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்