நீதிபதி: கணவரின் சம்பளத்தை அறியும் உரிமை மனைவிக்கு உள்ளது

2 mins read
fe21eaad-140f-456f-bf6e-fb3a7a73f91d
படம்: - பிக்சாபே

மதுரை: தனது கணவரின் மாதச் சம்பளம் எவ்வளவு என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கணவரிடம் பராமரிப்புத் தொகை கோரியிருந்தார் மனைவி.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தன் கணவர் வாங்கும் சம்பளம் குறித்து மனைவி விவரம் கோரினார்.

இதற்கு கணவர் ஆட்சேபம் தெரிவித்ததால், மனைவி கோரிய தகவலை பல்கலைக்கழக நிர்வாகத்தால் அளிக்க முடியவில்லை.

இதையடுத்து, சென்னையிலுள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில் மனைவி மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மனைவி கோரிய தகவல்களை அளிக்க உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்த நீதிபதி, “கணவன், மனைவிக்கு இடையே வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், மனைவிக்கு என சில அடிப்படை விவரங்கள் தேவைப்படுவது இயற்கை.

“மனைவிக்கு வழங்கவேண்டிய பராமரிப்புத் தொகை என்பது மனுதாரர் பெறும் சம்பளத்தைப் பொறுத்தது. மனுதாரர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்ற விவரம் தெரியாவிடில் மனைவியால் தன் சட்டப்பூர்வ உரிமையைக் கோரமுடியாது.

“எனவே, கணவரின் சம்பளத்தை அறிய மனைவிக்கு உரிமை உண்டு. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்