மோடி: தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி

2 mins read
72bac388-f9b2-47ea-9344-4e1a1b07a1f2
தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர் . சாம்பியன்களின் பூமி தமிழ்நாடு. 2036ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி செய்து வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி எனப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

முன்னதாக கேலோ இந்தியா போட்டிக்கான சுடரை அவர் ஏற்றி வைத்தார்.

‘வணக்கம் சென்னை’ என்று குறிப்பிட்டு தமது உரையைத் தொடங்கிய பிரதமர், இனி இளைய இந்தியாவே புதிய இந்தியா என்றார். அதிகமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதிக வீரர்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டார். “ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. எதிர்வரும் 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான சின்னத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். “இளையர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளிலும் குறிப்பிட்டுள்ளார். “தொன்மையான தமிழ் மொழி மட்டுமன்றி, தமிழகத்தின் விருந்தோம்பலும் நம் மனதை வெல்லும். தமிழகத்துக்கு வருகை தருவது சொந்த ஊருக்கு வரும் உணர்வைத் தருகிறது. அந்த அளவுக்கு தமிழ் மக்களின் வரவேற்பும் விருந்தோம்பலும் உள்ளது. விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்துக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையில் விளையாட்டை முக்கிய அங்கமாக வைக்கப்பட்டுள்ளது என்றார்.

“கேலோ இந்தியா விளையாட்டில் சிலம்பம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கேலோ விளையாட்டில் பங்கேற்பதால் புதிய நண்பர்களை அடையாளம் காண முடியும்

“தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, மாரியப்பன் உள்ளிட்ட சாம்பியன்களை தமிழ்நாடு உருவாக்கி உள்ளது.

“கேலோ இந்தியா போட்டியால் 2024ஆம் ஆண்டு விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது,” என்று தெரிவித்தார். .

குறிப்புச் சொற்கள்