திருச்சி: திருவரங்கத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளை காவல்துறை கைது செய்தது. கைதுசெய்யப்பட்டவர்களில் வீட்டுக்காவலில் இருந்து வெளியேறிய அய்யாக்கண்ணுவும் ஒருவர்.
முன்னதாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு காவல் துறையில் அனுமதி கேட்டாா். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதைத் தொடா்ந்து, பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அவா் அறிவித்தாா்.
இதையடுத்து, அவா் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என காவலர்கள் கூறியதுடன், அவரை திருச்சி அண்ணாமலை நகரில், வியாழக்கிழமை முதல் வீட்டுக்காவலில் வைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடியைக் கண்டித்து திருச்சியில் சாமி தரிசனம் செய்ய வந்த மோடிக்கு எதிராக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

