சென்னை: தமிழகத்தில் ஆயிரத்தில் ஆறு குழந்தைகளுக்கு பிறவி முதலே காது கேளாமை பாதிப்பு இருப்பதாக காது-மூக்கு-தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வோருக்கு இத்தகைய பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவா் மேலும் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற கலைஞா் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் டாக்டா் மோகன் காமேஸ்வரன் பேசியபோது, “உடல் குறைபாடுகள் விகிதத்தில் உலக அளவிலும் இந்திய அளவிலும் காது கேளாமை பாதிப்பே இரண்டாவது இடத்தில் உள்ளது.
“தற்போது உலகம் முழுவதும் 63 கோடி பேருக்குச் செவித் திறன் குறைபாடு உள்ளது என்றும் 2050ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 90 கோடியாக உயரக்கூடும் என்றும் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுள்ளன.
“இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளில் இருவருக்கும் தமிழகத்தில் ஆறு குழந்தைகளுக்கும் இந்தப் பாதிப்பு காணப்படுகிறது.
“உலக அளவிலான பிறவி காது கேளாமை விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அளவுக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
“நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதே இதற்கு முக்கியக் காரணம் என்பதால், இதுகுறித்த புரிதலும் விழிப்புணர்வும் அவசியம் தேவை.
“பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் செவித் திறன் கருவிகளால் பயன் இல்லாதவா் களுக்கும் ‘காக்ளியா் இம்ப்ளாண்ட்’ எனப்படும் செவி மடு சுருள் கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“அதன்பிறகு பேச்சு, மொழித் திறன் பயிற்சிகளைத் தொடா்ந்து வழங்குவது அவசியம்.
“அந்த வகையில் தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக ‘காக்ளியா் இம்ப்ளாண்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன,” என்றார் அவா்.