சென்னை: சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்புத்தகக் கண்காட்சி ஜனவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. கடைசி நாளையொட்டி காலையிலிருந்தே வாசகர்கள் கூட்டம் அலைமோதியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நடந்த 19 நாள்களில் மொத்தம் 15 லட்சம் பேர் பேர் வருகை தந்துள்ளதாகவும் ரூ18 கோடிக்கு புத்தக விற்பனை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வருகை தந்தவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 900 அரங்குகளில் ஏராளமான தனித்துவமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
புத்தகக் காட்சிக்கு ஆர்வத்துடன் வருகை தந்த பொதுமக்கள், புத்தகங்களை வாங்கி செல்வதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவு அரங்குகளில் விதவிதமான உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
புத்தகக் காட்சியின் நிறைவு விழாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், பதிப்புப் பணியில் நூறாண்டுகளை நிறைவு செய்த கடலங்குடி பதிப்பகத்துக்கும், பதிப்பாளர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் - யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்திற்கும் நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து பதிப்புப் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த 10 பதிப்பகங்களுக்கும், 25 ஆண்டுகள் நிறைவு செய்த 22 பதிப்பகங்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

