வெளிநாட்டுப் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வரவேண்டும்

2 mins read
1c7ab43c-ded4-4b31-bdf2-218f64ef7984
 75வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு முதல் கூடுதலாக சோதனை நடத்தப்பட்டு வருவதால் பயணிகள் பயண நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விமானப் பயணிகளுக்கு வழக்கமான சோதனைகளைக் காட்டிலும் கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டுப் பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், அனைத்துலகப் பயணிகள் மூன்றரைமணி நேரத்துக்கு முன்னதாகவும் வருமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் யாவும், முக்கிய நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்வர்.

அதேபோல் வெடிகுண்டு பரிசோதிக்கும் நிபுணர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களுக்கு உள்ளே செல்லும் இடத்திலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்தியா ஜனவரி 26ஆம் தேதி தனது 75வது குடியரசு தின விழாவைக் கொண்டாவுள்ளது. கொண்டாட்டங்களின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்குவந்துள்ளது.

இந்த பாதுகாப்பு ஜனவரி 30ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மேலும் குடியரசு தினத்திற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்தே ஏழு அடுக்குப் பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்