சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை

1 mins read
398bac5d-ae56-4838-a317-bc144a1242c5
செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் திங்கட்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கியது.

இந்த வழக்கில் பிணை நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 22ஆம் தேதி (திங்கள்கிழமையுடன்) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி வாயிலாக அவா் முன்னிலையானார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன்மூலம் 16வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்