4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 52 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை: பொது சுகாதாரத்துறை தகவல்

4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 52 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை: பொது சுகாதாரத்துறை தகவல்

2 mins read
1227611f-7118-4f8f-af1c-5f973204ae3d
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு என புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இப்புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இதயம், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இதையடுத்து, தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு தற்போது 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பொது சுகாதாரத்துறை செய்துள்ளது.

முதற்கட்டமாக, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அம்மாவட்டங்களில் வீடு, வீடாக அழைப்புக் கடிதத்தை சுகாதாரப் பணியாளர்கள் வழங்குவர் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மூன்று விதமான புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக, ஆண், பெண் என இருபாலரும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

“முதற்கட்டமாக அந்த வகையில், 4 மாவட்டங்களில், 19 லட்சம் பெண்கள் உட்பட 52 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும். அதன்பின், அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்று செல்வவிநாயகம் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்