பணிப்பெண் மீது தாக்குதல்: எம்எல்ஏ மகனுக்கு சிக்கல்

பணிப்பெண் மீது தாக்குதல்: எம்எல்ஏ மகனுக்கு சிக்கல்

1 mins read
e44eca7c-4460-4bbc-8a11-65085ee19de6
மனைவியுடன் ஆண்டோ. - படம்: ஊடகம்

சென்னை: பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கி துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இருவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா இருவரும் தங்கள் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ரேகா என்ற 18 வயது இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தினர் என்றும் உரிய ஊதியத்தை வழங்கவில்லை என்றும் புகார் எழுந்தது. மேலும், சாதி அடிப்படையில் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தனக்கு ஏற்பட்ட நிலைகுறித்து பாதிக்கப்பட்ட பணிப்பெண் ரேகா பேசும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகியோர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஆண்டோ, மெர்லினா ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

குறிப்புச் சொற்கள்
வன்கொடுமைபணிப்பெண்