புது வீடு, புது முடிவு, புது வியூகம்; மீண்டும் தீவிர அரசியலில் சசிகலா

புது வீடு, புது முடிவு, புது வியூகம்; மீண்டும் தீவிர அரசியலில் சசிகலா

2 mins read
09719433-38ae-4b3a-a720-d332a69f246f
போயஸ் தோட்டத்தில் சசிகலாவின் புதிய வீடு. - படம்: ஊடகம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து மீண்டும் போயஸ் தோட்டத்தில் குடியேறி உள்ளார் சசிகலா.

அப்பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய வீடு கட்டப்பட்டுள்ளது என்றும் அந்த வீட்டில் ஜனவரி 24ஆம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற்றது என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

புது வீட்டில் இருந்தபடி அவர் தமது அரசியல் நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்வார் என்றும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா காலமானதை அடுத்து போயஸ் தோட்டத்தில் அவர் வசித்து வந்த வீடு அரசுடமையாக்கப்பட்டது. இப்போது அது நினைவு இல்லமாக மாறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் மகள் தீபாவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து அவ்வீடு இவர்கள் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இதனால் பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டத்தில் ஒன்றாக வசித்து வந்த சசிகலா, வேதா இல்லம் என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து வெளியேற நேரிட்டது.

எனினும், ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே நிலம் வாங்கி அதில் சொந்த வீடு கட்டியுள்ளார் சசிகலா.

புதன்கிழமை காலை புதுமனை புகுவிழா நிகழ்வு நடைபெற்றதை அடுத்து, சசிகலா உற்சாகத்துடன் காணப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் சசிகலாவுக்கு நெருக்கமான உறவினர்கள், ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இதுவரை அமைதியாக தமிழக அரசியல் போக்கை கவனித்து வந்த சசிகலா, இனி முழு வீச்சில் காய்களை நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக, பிளவுபட்ட அதிமுகவை இணைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்றும் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அவர் மீண்டும் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்றும் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்