சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய ராமதாஸ் வலியுறுத்து

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய ராமதாஸ் வலியுறுத்து

2 mins read
3074c033-5a35-4f07-ba4e-a6371f276797
ராமதாஸ். - படம்: கோப்புப்படம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தை நூறு நாள்களுக்கு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஓர் அறிக்கையில் இதைச் சுட்டிக்காட்டிள்ள ராமதாஸ், ஜனநாயகம் தழைக்க சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலங்களில் திமுக கூறி வந்தது என்றும் இப்போது திமுக திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அவையில் உறுப்பினர்கள் உரையாற்றும் போது, அதில் இடம்பெறும் நாகரிகமற்ற சொற்களையும், தனிநபர் தாக்குதல்களையும் நீக்க வேண்டியிருப்பதாகவும், அதனால் தான் நேரலை செய்ய முடியவில்லை என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது.

“நாடாளுமன்ற நிகழ்வுகளிலும் ஒளிபரப்பான உரைகளில் இருந்து பல பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் செய்ய முடியும். அதற்காக அவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய இயலாது என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது,” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், தங்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்