சென்னையில் குற்றச்செயல்களைக் குறைக்க மூன்று புதிய செயலிகளை அறிமுகப்படுத்திய டிஜிபி

1 mins read
149183bf-e162-49d4-86fd-c7eee4c85793
சங்கர் ஜிவால். - படம்: ஊடகம்

சென்னை: குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் சென்னையில் மூன்று புதிய செயலிகளை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

‘பருந்து’, ‘பந்தம்’, ‘நிவாரணம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இவற்றின் சேவை குறித்து தமிழகக் காவல்துறைத் தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

‘பருந்து’ என்ற பெயரிலான புதிய செயலி சென்னையில் 24 மணி நேரமும் குற்றவாளிகளைக் கண்காணிக்க உதவும் என்றார் அவர்.

“குற்றவாளிகள் பிணையில் வெளிவரும்போது அல்லது குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும்போது ‘பருந்து’ செயலி காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பும். அதன்பேரில் அதிகாரிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

“சென்னையில் வசிக்கும் 75 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், தனியாக வசிப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“தனித்து வாழ்பவர்களுக்கு அவசரத் தேவைகளின் போது உதவுதல், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு வகை உதவிகள் அளிக்கப்படும்,” என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

சென்னையில் காணாமல் போகும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் அவற்றை குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் புதிய கண்காணிப்பு அமைப்பும் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ’நிவாரணம்’ என்ற செயலியும் அறிமுகமாகி உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்