குடியரசு தினம்: பாதுகாப்புப் பணியில் 7,500 காவலர்கள்

குடியரசு தினம்: பாதுகாப்புப் பணியில் 7,500 காவலர்கள்

2 mins read
54136716-c15c-48a7-bf7b-d22f1615a3e1
சென்னை விமான நிலையத்தில் தற்போது கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: குடியரசு தினவிழாவையொட்டி சென்னை கடற்கரைப் பகுதியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் சென்னையில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 7,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி 26ஆம் தேதி (இன்று) சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்த உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஆளில்லா வானூர்தி, வெப்பக்காற்று பலூன்கள் ஆகியவற்றை சென்னையில் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் மாளிகை, முதல்வரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கிச் செல்லும் சாலைகள், குடியரசுதின விழா நடைபெறும் கடற்கரைப் பகுதி ஆகியவை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

கடற்கரை உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் சுற்றுக்காவல் பணி தீவிரமடைந்துள்ளது என்றும் காவல் ஆணையர் கூறினார்.

இதனிடையே சென்னை விமான நிலையம், ரயில் – பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கடலோரப்பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்