சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், சேலம் மேற்குத் தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கலந்துகொண்டு பேசியபோது, திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருள், மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இங்கு நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் நான் உங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று மாணவர்கள் காலில் சட்டென்று விழுந்தார்.
அப்போது பலரும் அவரைத் தடுத்ததை அடுத்து, “நான் அரசியல் பண்ண விரும்பவில்லை. நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும் இடத்தில் உங்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் அசிங்கப்படுத்தி விட்டார்கள். நான் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என இரண்டாவது முறையாக மாணவர்கள் முன்பாக மீண்டும் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.
“இங்கு நடந்த அனைத்தையும் மறந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சைக்கிள் ஓட்டும்போது சாலையில் கவனம் செலுத்தி, சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தி விட்டு மாணவர்களுக்குச் சைக்கிள்களை வழங்கினார்.
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மாணவர்கள் காலில் விழுந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

