சோல்: பதினைந்து வயது ஆடவர் ஒருவர் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான பே ஹியுன் ஜின் என்பவரை வியாழக்கிழமை தாக்கிய சம்பவத்தை அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் பயங்கரவாதச் செயல் என வர்ணித்துள்ளார்..
நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி பே ஹியுன் ஜின், வயது 40, வியாழக்கிழமை (ஜனவரி 25) அன்று அந்த ஆடவரால் கங்னம் வட்டாரத்தில் பாறாங்கல் ஒன்றால் பல முறை தலையின் பின்பக்கத்தில் தாக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்பொழுது தேறி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அவருக்கு ஏற்பட்ட 1 சென்டிமீட்டர் நீளக் காயத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய காயமல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவாட்டி பே ஹியுன் ஜின்னை தாக்கியவர் 15 வயது ஆடவர் என்று காவல்துறை உறுதி செய்துள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது. அந்த ஆடவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் விளக்கியது.
தென்கொரிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் லீ ஜே மியுங் கழுத்தில் சில வாரங்களுக்கு முனனர் பூசான் நகரில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

