சென்னை: நாட்டின் 75வது குடியரசு தின விழா தமிழ்நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர், வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வரின் சிறப்பு விருது
தனது மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய மதுரை மாவட்டம், கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவித்தார்.
விருது பெற்ற பூரணம் அம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவே நான் நிலத்தை வழங்கியிருக்கிறேன்.
“கல்வி கற்கும் பெண் குழந்தைகள் வாழ்க்கையில் எந்தவொரு சூழலிலும் துவண்டுவிடாமல் விடா முயற்சியோடு போராடி, கல்வியின் துணையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்
வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த மீனவர் யாசர் அராபத், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், நெல்லை மாவட்டம் டேனியல் செல்வசிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சென்னையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 7,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

