‘ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்’ என சமூக ஆர்வலர் விழிப்புணர்வுக் கல்வெட்டு

‘ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்’ என சமூக ஆர்வலர் விழிப்புணர்வுக் கல்வெட்டு

1 mins read
e5033260-dc2f-4516-9b55-6850e190bcb8
மதுரையில் சமூக ஆர்வலர் ஒருவர் தனது வீட்டில் வித்தியாசமான முறையில் கல்வெட்டு வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். - படம்: தமிழக ஊடகம்

மதுரை: மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ‘ஓட்டுக்குப் பணம் வாங்குவது குற்றம்’ என தனது வீட்டில் கல்வெட்டு ஒன்றை வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மதுரை, கல்யாணசுந்தரபுரம் பூந்தமல்லி நகர் பகுதியில் வசித்து வருகிறார் சங்கரபாண்டியன், 38, கட்டடங்களில் தரைக் கல் பதிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

சமூக ஆர்வலரான சங்கரபாண்டியன், வைகை நதி நீராதாரப் பாதுகாப்பு, குடியிருப்புகள் அருகே இருக்கும் மதுக்கடைகளை சட்ட ரீதியாக அகற்றுவது, வெயில் காலங்களில் மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

வாக்களிக்க லஞ்சம் வாங்கக் கூடாது என்பதை சுவர் விளம்பரங்கள், பிரசாரம் மூலம் விழிப்புணர்வூட்டி உள்ளார்.

இவர் இதுவரை இடைத்தேர்தல் உட்பட நான்கு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். கடைசியாக போட்டியிட்ட மதுரை மாநகராட்சித் தேர்தலில் 265 ஓட்டுகளே இவர் பெற்றுள்ளார்.

“’தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே எனது நோக்கமல்ல. பணத்துக்காக வாக்குகளை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதும் எனது முக்கிய இலக்கு,” என்கிறார்.

இந்தாண்டு தனது வீட்டின் முன்பு அவரது நோக்கத்தை கல்வெட்டாக சுவரில் பதித்து வைத்துள்ளார். இவருடன் 10க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களும் இப்பிரசாரத்தை தொடர்ந்து செய்து வரும் நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்