சென்னை வந்தது பாடகி பவதாரிணி உடல்: திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: இலங்கையில் காலமான இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் சென்னை வந்தடைந்தது. தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி, 47, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை காலமானார்.

பிரபலமான பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் திரைத்துறையில் பவதாரிணி வலம் வந்தார்.

‘ராசய்யா’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான அவர், ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து அவரது உடல் சென்னை எடுத்து வரப்பட்டது.

பவதாரிணியின் உடலை அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகியோர் சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவிற்கு வந்து பெற்று, தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதைத் தொடர்ந்து பவதாரிணியின் கணவரது ஊரான லோயர் கேம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இன்று அங்கு அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜாவின் தி.நகர் இல்லத்தில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், அங்கு காவலர்களின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பவதாரிணியின் மறைவு தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

”மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

பாடகி பவதாரிணி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர் பவதாரிணி. இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார். பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இனிமையான தனது தனித்துவம் வாய்ந்த குரலால் தனித்து நின்றவர் பவதாரிணி. அவரது திடீர் இழப்பு இசைத் துறையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரது ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்,” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், வடிவேலு உள்ளிட்டோரும் தங்களது இரங்கல் செய்தியைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!