சென்னை: தமிழக அரசின் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, குடியரசு நாளில் செய்தியாளரும் ஆல்ட் நியூஸ் இணையத் தளத்தின் இணை நிறுவனமான முகம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 75-வது குடியரசு நாள் வெள்ளிக்கிழமை நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகேயுள்ள கொடிமரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது திருத்தப்பட்ட நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மத நல்லிணக்கத்திற்காக சேவையாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஆல்ட் நியூஸ் இணையத் தளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ரபீக் என்பவரது மகன் முகமது ஜூபைர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
முகமது ஜுபைர் ‘ஆல்ட் நியூஸ்’ என்ற பெயரில் இணையத் தளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையத் தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது ஆல்ட் நியூஸ் இணையத் தளம் மூலம் தெரியப்படுத்தினார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பாஜகவின் தமிழ் நாடு மாநிலத் தலைவரான அண்ணாமலை, “குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கான விருதுக்குத்தான் அவர் சரியான நபராக இருந்திருப்பார்” என்று கூறியுள்ளார்.

