சென்னை: இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் தேசியக்கொடியைச் சென்னை விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் தீபக் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீராம், விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொழில் பாதுகாப்பு காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீராம், “விமான நிலையத்தில் பணி புரியும் மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் பயணிகளிடம் அவர்கள் எளிதாக அணுக முடியும் என நாங்கள் எண்ணுகிறோம்” என்றார்.
“தினந்தோறும் 400 விமானச் சேவைகள் சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. புதிய பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
“பயணிகள் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்குத் தடையில்லாமல் செல்வதற்குத் தேவையான மேம்பட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் வசதிக்காக விமான நிலையம் மின்மயமாக்கப்பட்டுள்ளது,” என அந்நிகழ்ச்சியில் பேசிய விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் தீபக் கூறினார்.
மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களின் சாகச அணிவகுப்பும் சாகச நிகழ்ச்சியும் பாதுகாப்பு, வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தன.
முதல் முறையாக பெண் காவலர்களும் விமான நிலையத்தின் முதல் தளத்திலிருந்து கயிறு மூலம் இறங்குதல், பல உத்திகளில் எதிரிகளை தாக்குவது, எதிரிகளிடம் இருந்து முக்கிய தலைவர்களைப் பாதுகாப்பது, குழுவாக சேர்ந்து தனித்தனியாக தாக்குதல் நடத்துவது, 30 அடி உயரத்தில் இருந்து தேசியக் கொடியை பிடித்தபடி கயிற்றில் இறங்குவது போன்ற வீர சாகசங்களைச் செய்து காட்டினர்.