சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் வேடியப்பன். விவாகரத்து பெற்ற மயில் என்ற இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி காலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மயில் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடி விட்டார் எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் தீக்காயம் அடைந்த பெண்ணிடம் கோயம்புத்தூர் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். சிகிச்சைக்குப் பின்னர் மே மாதம் 25ஆம் தேதி அந்த பெண் வீடு திரும்பினார். அதன்பின்னர், கொலை முயிற்சி குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் நேரில் முன்னிலையாகும்படி நீதிமன்ற சம்மனை எடுத்துக்கொண்டு காவல்துறை சென்றபோதுதான் தீக்காயமடைந்த மயில் 2012ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மரணம் அடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மீண்டும் புலன் விசாரணை நடத்தப்பட்டு, வேடியப்பன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட செசன்சு நீதிமன்றம், வேடியப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேடியப்பன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையில் சாட்சியம் அளித்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. அதே போல் மருத்துவச் சான்றிதழில் அந்தப் பெண் இறப்பதற்கு முன் 25 முதல் 30 விழுக்காடு தீக்காயம் இருந்தது என்றும் இறந்ததாகக் கூறிய பின் 55 விழுக்காடு தீக்காயம் இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதால், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சாட்சிகளின் அடிப்படையில் மனுதாரருக்குத் தண்டனை வழங்க முடியாது, அதனால், வேடியப்பனுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்து வேடியப்பனை நீதிமன்றம் விடுவிக்கிறது என்று தீர்ப்பளித்தனர்.

