கூடலூர்: இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் சனிக்கிழமை (27-1-2024) தேனி மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜா பங்களாவில் உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாடகி பவதாரிணியின் உடல் வெள்ளிக்கிழமை சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்பு இவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
தேனீ மாவட்டம் லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே இடத்தில் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சனிக்கிழமை தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
பவதாரிணியின் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, நடிகர்கள் அரவிந்த், கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் பவதாரிணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.