மேகேதாட்டு அணை பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்

மேகேதாட்டு அணை பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்

2 mins read
0e793b26-b75d-437a-8e10-6ef7ba62dab0
பாமக நிறுவனர் ராமதாஸ். - படம்: இணையம்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும் நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.

அப்பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கர்நாடகத்தை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “மேகேதாட்டு அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேகேதாட்டு அணைக்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது,” என்றார்.

மேலும், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகேதாட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.

“மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும்.

“இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

“வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. 

“அதனடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

தடையை மீறி அணைக்கான பணிகளைக் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகேதாட்டு அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும்; எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்