சென்னை: கடந்த ஓராண்டில் மட்டும் தலைநகர் சென்னையில் 235 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.1 லட்சத்து 5ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி சுங்கத்துறை சாதனை படைத்துள்ளது என சுங்கத்துறை தலைமை ஆணையர் டாக்டர் ராம் நிவாஸ் தெரிவித்தார்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் அனைத்துலக சுங்க நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவராஜு நாகார்ஜுன், மத்திய சரக்கு, சேவை வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ஆசிஸ் வர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் டாக்டர் ராம் நிவாஸ் பேசியபோது, “நாட்டின் எல்லையோரப் பகுதியில் சுங்கத்துறையினர் ஆற்றும் பணி முக்கியமானது.
“சட்டவிரோதமான முறையில் பொருள்களைக் கடத்துதல், அபாயகரமான பொருள்களைக் கொண்டு வருதல் உள்ளிட்ட முறைகேடுகளைக் கண்காணித்து, அவற்றைத் தடுத்து நிறுத்தும் வண்ணம் சம்பந்தப்பட்டவர்கள் மீது சுங்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
“வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரும் தங்கம், வெளிநாட்டுப் பணம், அரியவகை விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
“கடந்த ஓராண்டில் சென்னை சுங்கத்துறை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டில், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி இலக்கை எட்டி விடுவோம்,” என்றார்.

