சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஞாயிறன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றினார். ஆனால், அது அறுந்து விழுந்தது.
எனினும் இதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளாமல், இதுவரை இருந்த தடைகளைத் தாண்டிவிட்டதாக அவர் நேர்மறையாகப் பேசினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) முதல் தமிழகம் முழுவதும் தேமுதிக கொடியை முழுக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி,ஞாயிறன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றியபோது, உயரே சென்ற கொடி எதிர்பாராதவிதமாக அறுந்து கீழே இருந்த தொண்டர்கள் மீது விழுந்தது.
பின்னர் அந்தக் கொடியை மீண்டும் கட்டி மறுபடியும் கொடியை ஏற்றினர். அதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேப்டன் மறைந்து இன்று 32வது நாள். ஒரு மாதம் கழித்து கட்சியின் கொடியை முழுக் கம்பத்தில் ஏற்றினோம். ஏற்றும்போது கயிறு அறுந்து கொடி கீழே விழுந்து விட்டது.
“ஒரு தடைக்கு அப்புறம்தான் மிகப்பெரிய வெற்றி இருக்கும் என்று சொல்வார்கள். இன்று கட்சியின் கொடி அறுந்ததன் மூலம் இதுவரை இருந்து வந்த எங்களுடைய அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்துள்ளது.
“இனி தேமுதிக கொடி பட்டொளி வீசி பறக்கும்; கேப்டனின் லட்சியத்தை நாங்கள் நிச்சயம் அடைவோம்” என்று சூளுரைத்தார்.

