சென்னை: தமிழகத்துக்குப் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்துக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியல் என்ற இலக்கை எட்டும் முயற்சியில் நடப்பாண்டின் தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வெற்றிகரமாக அமைந்தது என்றார்.
இதையடுத்து எட்டு நாள்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்குச் செல்வதாகவும் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க, தாம் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அந்த பயணத்தில் 15,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான தாகக் கூறினார்.
மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றபோது, 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்களுக்கு தமிழக அரசு உடனுக்குடன் செயல் வடிவம் கொடுத்ததாகவும் இதனால் மேலும் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ முன்வந்துள்ளதாகவும் முதல்வர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
ஜப்பான், சிங்கப்பூரை போலவே ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், வணிக அமைப்புகள், தொழில்முனைவோர் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
“இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல், கட்டமைப்பு, மனிதவளம் போன்ற சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகம்தான் உகந்த மாநிலம் என்று ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் பயணத்தில் பெரும் நிறுவனங்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பயணத்தின்போது மேற்கொள்ளப்படும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

