ராஜபாளையம்: தமிழகத்தின் குலசேகரபட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ துணை இயக்குநர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இஸ்ரோவில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ‘ககன்யான்’ வடிவமைப்பு, சோதனை பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல் ஆகும்.
“மனிதனை விண்வெளிக்கு அனுப்ப உதவும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக தரை இறக்குவது குறித்த சோதனை நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்தியாவிற்கு ககன்யான் ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார் சந்திரசேகர்.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் மேலும் ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என்றும் இஸ்ரோ துணை இயக்குநர் சந்திரசேகர் மேலும் கூறினார்.

