சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் விதிமுறைகளுக்கு முரணாக, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி மீன்வளத்துறை உதவி இயக்குநர் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
மத்திய அரசின் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டப்படி கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள்தான் இறால் பண்ணைகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உரிய அனுமதியைப் பெறாமல் அமைக்கப்பட்டிருந்ததால் அந்தப் பண்ணைகளை மூட உத்தரவிடப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 2,709 இறால் பண்ணைகள் உள்ளதாகவும் அவற்றில் 2,227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை எனவும் 348 பண்ணைகளின் அனுமதி குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும் 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, அனுமதியின்றி செயல்பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

