தென்சென்னையில் குஷ்புவை களமிறக்க பாஜக திட்டம்

1 mins read
1e883cc3-fffe-4761-b459-ad54622dca3c
வரும் மக்களவைத் தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் குஷ்புவை பாஜக களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை வேளச்சேரியில் திங்கட்கிழமை திறக்கப்பட்டது.

அகில இந்திய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், இணை பொறுப்பாளர் முனியசாமி, மாவட்டத் தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான அளவுக்கு வெற்றி பெறவேண்டும் என்று பாஜக தலைமை விரும்புவதாகவும் அதற்கேற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்சென்னையில் போட்டியிட கரு.நாகராஜன், திருப்பதி நாராயன், ரமேஷ் சிவா, எஸ்.ஜி.சூரியா உள்பட சிலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். ஆனால் பாஜக தலைமை, எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களைக் களம் இறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருடைய பெயரும் பரிசீலனை பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, “எனக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதே எல்லோரது எண்ணம்.

“தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் என்று பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். கட்சி இடும் கட்டளையை நிறைவேற்றுவதுதான் எங்கள் கடமை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்