ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற இந்தியத் தூதர் தினேஷ்

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற இந்தியத் தூதர் தினேஷ்

1 mins read
2da8b303-f56c-457c-af1a-e76fbb95f722
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் அந்த நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு ஸ்பெயின் நாட்டுக்கான இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக் முதல்வர் ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதுகுறித்து தமிழ் நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 27.1.2024ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு அதற்கு மறுநாள் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மட்ரிட் சென்று சேர்ந்தார்.

மட்ரிட்டில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக், ஸ்பெயின் முதல்வரின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார்.

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார்.

இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்