மதுரை: கீழடி அகழாய்வுப் பணிகளை முழுக்க முழுக்க மாநில அரசே மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி வரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களை விரைவில் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசுத்தரப்பு தெரிவித்தது.
சென்னையைச் சேர்ந்த கனிமொழி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கீழடி அகழாய்வுப் பணியை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்தி வந்த நிலையில், அவர் அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருக்குப் பதிலாக ஜோத்பூரில் தொல்லியல் பொருள்கள் பாதுகாவலரான ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், 15 ஆண்டுகளாக தொல்லியல் பொருள்களைப் பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வந்துள்ளார் என்றும் அவருக்கு அகழாய்வுப் பணியில் போதிய அனுபவம் இல்லை என்றும் கனிமொழி சுட்டிக்காட்டி உள்ளார்.
அகழாய்வுப் பணியில் சிறப்பாக செயல்பட்ட கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றை மறைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் கனிமொழி, அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வுப் பணியைத் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
“மேலும், மூன்றாம் கட்ட சோதனையின்போது கிடைத்த தொல்லியல் பொருள்களை கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கவில்லை. தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை வெளியிடவில்லை,” என்றார் கனிமொழி.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு நிறைவடைந்து, அடுத்த கட்ட பணியை விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
அகழாய்வுப் பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும் அகழாய்வில் கிடைத்த பொருள்களின் வரலாற்றுத் தொடர்பான விவரங்களை மத்திய அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.