சென்னை: மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் செயல்பாடுகளையும் அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த ஏழு நாள்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர்.
“இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான் இன்றுள்ள பிரச்சினைக்குக் காரணம்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அச்சமயம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனை இந்திய அதிபருக்கு அனுப்பி வைத்தது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என தமிழ் இந்து ஊடகச் செய்தி குறிப்பிடுகிறது.
முன்னதாக மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் கோல்கத்தாவில் அளித்த பேட்டியில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அடுத்த ஏழு நாள்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் இது தாம் அளிக்கும் உத்தரவாதம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதன் தோழமைக் கட்சிகளும் குடி யுரிமை திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

