இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் உரிமைத்தொகை திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் உரிமைத்தொகை திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

1 mins read
89636c88-eaf0-4aa8-be3a-422e6a0f373b
மண்டபம் பகுதி இலங்கை அகதிகள் முகாம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களும் பயன்பெற உள்ளன.

தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கும் உரிமைத்தொகை வழங்கக் கோரி லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது என இந்து தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 29 மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்கள் உள்ளன. அவற்றில் 19,487 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இனி இக்குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

நடப்பு பிப்ரவரி மாதத்திலேயே பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்