ஸ்பெயின்: ஸ்பெயின் நாடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.
“எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
“காற்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளியல் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்கள் மற்றும் 20 ‘பார்ச்சூன் 2000’ நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளியலாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளியலாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளியல்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.
“கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கி டீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
“இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாள்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
“வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவச் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.
“தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து தொழில்துறை அமைச்சரும், அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

