சென்னை: மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என சென்னையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள் குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.
“நாடாளுமன்ற மக்களவையில் பாமக-வுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததில் முதன்மை காரணமாக இருந்தது பாமகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்ததுதான்.
“மக்களவையில் பாமகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பாமகவின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான். அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாமக செயல்பட்டு வருகிறது.
“அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

