தமிழர்கள் போல் ஸ்பெயின் மக்களும் மொழி, பண்பாட்டை இரு கண்களாகக் கருதுகிறார்கள்: மு.க.ஸ்டாலின்

2 mins read
12b45c03-9338-4d0c-882f-1ca7424e34c7
ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ஜனநாயக சக்திகளை மிரட்டுவது ஒன்றுதான் பாஜக அரசின் பத்து ஆண்டு காலச் சாதனை என அவர் விமர்சித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் இருந்தபடி இந்தக் கடிதத்தை எழுதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்பெயின் நாட்டிலும் தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலான சந்திப்புகளும் அதன் தொடர்ச்சியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெயினில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான்.

“நம் தமிழ்நாட்டைப் போலவே மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் கருதி, உயிரெனப் போற்றக்கூடியவர்களாக ஸ்பெயின் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெயின் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்கின்றன,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஏறுதழுவுதல் போல ஸ்பெயின் நாட்டிலும் எருது ஓட்டும் போட்டி உண்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழர்களின் உயிருக்கு நேரான தமிழ்மொழி போல, ஸ்பெயின் மக்களும் தங்களுடைய தாய்மொழியான ஸ்பானிய மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டிருப்பதாகப் பாராட்டி உள்ளார்.

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை ஸ்பானிய மொழி பெற்றுள்ளதாகவும் அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஸ்பானிய மொழியே முதன்மை பெற்றுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ஜப்பான் சென்றபோதும் அங்கே அவர்களின் தாய்மொழியே முதன்மை பெற்றிருப்பதைக் கண்டேன். ஆதிக்க மொழிகளுக்கு இடம் தராமல், உலகத் தொடர்புக்கேற்ற அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்