பகலில் காவலர் பணி; இரவில் சங்கிலிப் பறிப்பு: தலைமைக் காவலர் கைது

பகலில் காவலர் பணி; இரவில் சங்கிலிப் பறிப்பு: தலைமைக் காவலர் கைது

2 mins read
ab386961-e3ce-4884-a6a8-3c215553f856
நகைப் பறிப்பில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சபரிகிரி. - படம்: தமிழக ஊடகம்

பொள்ளாச்சி: கோவையில் இருவேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தலைமைக் காவலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அத்துடன், அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரான மகேஸ்வரி, 58, கடந்த 27ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, அவ்வழியாக கறுப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப் பேர்வழியான ஆடவர், அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

அதேபோல் பொள்ளாச்சி அருகே அம்சவேணி, 32, இருசக்கர வாகனத்தில் உடுமலை சாலைப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அவ்வழியாக கறுப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த ஆடவர் இரண்டு சவரன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து இரு பெண்களும் அளித்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய காவலர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.

விசாரணையின்போது பொள்ளாச்சி நகரம், உடுமலை சாலைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஏறக்குறைய 150 சிசிடிவி கண்காணிப்புக் கருவிகளில் பதிந்திருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் இரு பெண்களிடமும் நகையைப் பறித்தவர் மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமைக் காவலர் சபரி கிரி, 41, என்பது தெரியவந்தது.

செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த அவர், சிறப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சபரிகிரியை கைது செய்து அவரிடம் இருந்து 7.5 சவரன் நகையை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

குறிப்புச் சொற்கள்
காவலர்