தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சசிகலா - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: இணைந்து பயணிப்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம்

2 mins read
a65baa98-9183-44a9-a0af-caa7c01c07f2
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சனிக்கிழமை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சனிக்கிழமை நேருக்கு நேராக சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சில நொடிகளே நீடித்தபோதிலும் இருதரப்பு தொண்டர்களும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்.

மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வந்தபோது இருவரும் சந்தித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது சசிகலா கூறுகையில், “தமிழக மக்கள் எப்போதும் எங்கள் பக்கம்தான். பன்னீர்செல்வம் உட்பட அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

இந்தச் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையேயான சந்திப்பு எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த முறை எம்ஜிஆர் நினைவிடத்தில் இதேபோல் ஒரே நேரத்தில்தான் ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால், ஓபிஎஸ் அங்கிருந்து காரில் கிளம்பிய பிறகுதான் எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்றார் சசிகலா.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்களது சந்திப்பு எதேச்சையாக நடந்ததாகவும் சசிகலாவுடன் இணைந்து பயணிப்பீர்களா என்ற கேள்விக்கு தொடர்ந்து இணைந்து பயணிக்கவே தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே சசிகலா ஓ.பி.எஸ் சந்திப்புக்கு இருதரப்பும் முன்பே திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இச்சந்திப்பு குறித்து பிற கட்சிகளும் சசிகலாவின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் எத்தகைய கருத்துகளை வெளிபடுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்வது என சசிகலா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

“இருவரது சந்திப்புக்கு அதிக ஆதரவு இருக்கும் பட்சத்தில், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் இருதரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இவர்கள் இருவருடனும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரக்கணக்கான கட்சி அரசியல்வாதிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குறிப்புச் சொற்கள்