தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 உலோகச் சிலைகள் மீட்பு; ஒருவர் கைது

1 mins read
dbec52b6-25fd-440b-b689-04164911636f
கடத்தப்பட்ட உலோகச் சிலைகள். - படம்: ஊடகம்

சென்னை: மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு உலோகச் சிலைகளை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சிலைக்கடத்தல் தொடர்பாக லட்சுமி நரசிம்மன் என்பவரை காவல்துறை கைது செய்தது. எனினும் காவல்துறையின் பிடியில் இருந்து அவர் எப்படியோ தப்பிச் சென்று தலைமறைவானார்.

அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், மகாபலிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் பிரபல சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளி என்பது தெரிய வந்தது. பழமை வாய்ந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபட்டிருந்த லட்சுமி நரசிம்மன் மீது பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அவருக்குச் சொந்தமான கிடங்கில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர்கள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது எட்டு பழமை வாய்ந்த உலோகச்சிலைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தை மதிப்பில் அச்சிலைகளின் விலை பல கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், அந்தச் சிலைகள் எந்தக் கோவில்களில் இருந்து திருடப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை என்றனர்.

குறிப்புச் சொற்கள்