சிவகங்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூர் பகுதியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொல்லியல் நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு ஒன்று கிடைத்தது.
இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த தொல்லியல் நிபுணரான புலவர் காளிராசா, அக்குறிப்பிட்ட கல்வெட்டின் நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் ஒரு பக்கத்தில் திரிசூல சின்னம் செதுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்தக் கல்வெட்டு இரண்டே முக்கால் அடி உயரம் கொண்டது என்றும் தெரிவித்தார். மேலும் விக்கிரமராம வளநாடு என்பதும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
“இக்கல்வெட்டு மாறவர்மன் விக்கிரம பாண்டியனைக் குறிப்பதாக கருதலாம். அவரது காலம் கி.பி. 1268 முதல் 1281 வரையிலானது.
“இதன் மூலம் இப்பகுதியில் சமணப்பள்ளி இருந்ததை அறிய முடிகிறது. அப்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு எல்லைகளிலும் கற்கள் நாட்டி, பூசைகள் நடத்த அனுமதித்து அரசு அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். கல்வெட்டில் காணப்படும் திரிசூலத்தை முனியசாமி தெய்வமாக அப்பகுதி மக்கள் வணங்குகின்றனர்,” என்றார் காளிராசா.

