சென்னை: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 13ஆம் தேதி சென்னை வருகிறார் என தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவார் என்றும் அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக, காங்கிரஸ் இடையே ஏற்கெனவே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. வரும் 9ஆம் தேதியன்று அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மல்லிகார்ஜுன கார்கே வருகைக்குப் பின்னரே காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளைக் கேட்பது என்பது முடிவாகும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில் மூன்றாம் சுற்றுப் பேச்சுகள் நடக்கும் என இருதரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசும் திமுகவும் இம்முறை தேசிய அளவில் உருவாகி உள்ள இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளின் செயல்பாட்டால் தற்போது சலசலப்பு நிலவுகிறது. எனினும், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையேயான உறவு வலுவாக இருப்பதாகவும் அந்த அடிப்படையில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடந்து முடியும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

