சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., தே.மு.திக, அ.தி.மு.க, த.மா.கா., ஆகிய கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஜே.பி.நட்டாவுடன் பேச்சுவார்த்தை
இதையொட்டி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த ஜி.கே.வாசன், கூட்டணி ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவிவழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக நட்டா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
த.மா.கா பொதுக்குழுக் கூட்டம்
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வருகிற 12ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் த.மா.கா. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இண்டியா கூட்டணியில் விரிசல்
வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதற்கு ‘இண்டியா’ என்னும் கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.
இந்தக் கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மேற்குவங்கம், பஞ்சாபில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட நிதிஷ்குமார் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்குப் சற்றுப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை
இந்நிலையில், வழக்கம்போல் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறக்கூடாது என்ற முனைப்புடன் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து திசைமாறி விடாமல் இருக்க, அவர்களுடன் தோழமையுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை திமுக மேற்கொண்டு வருகிறது.
வெளியேறிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பாஜக
இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தக்கவைக்கவும், கூடுதலாக கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்கவும், தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளைக் கைப்பற்றவும் பாஜக தலைமை வியூகங்களை வகுத்துவந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றம் சாட்டிவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முக்கியகட்சியான அதிமுக வெளியேறியது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து பாமக, தேமுதிக வெளியேறிய நிலையில், அதிமுகவும் வெளியே சென்றது கூட்டணியில் சல சலப்பை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் கேட்டதொகுதிகள் கிடைக்காத நிலையில், அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை அதிமுக கூட்டணிக்கு இழுக்க பழனிசாமி முயற்சி செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், வெளியேறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜன நாயக கூட்டணிக்கு வலுசேர்க்க த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசனை பா.ஜ.க., களமிறக்கியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.