ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராகப் பதவி ஏற்றார். தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்களை எழுந்து நிற்கச் சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் அரசுக்கு ஆதரவாக உள்ளவர்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கோரினார். பின்னர் அரசுக்கு எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்குமாறு அவர் தெரிவித்தார்.
அதன்படி, ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆளும் கூட்டணிக்கு எதிராக 29 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்கள் எதிர்க்கட்சியான பாஜக தரப்பைச் சேர்ந்தவர்கள்.
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இதில் பாஜகவுக்கு மட்டும் 26 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரின் பிரிவைச் சேர்ந்த ஒருவர்.
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.