அண்ணா பிறந்த நாளையொட்டி நீண்டநாள் கைதிகள் 12 பேர் விடுதலை

2 mins read
0784e94a-bff8-46d0-ad26-d5f9387e2af8
அண்ணா பிறந்தநாளையொட்டி நீண்ட நாள் கைதிகள் 12 பேரை விடுதலை செய்துள்ளது தமிழக அரசு. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அண்ணா பிறந்த நாளையொட்டி நீண்டநாள் கைதிகள் 12 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற கைதிகள் சிலரை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, அதுகுறித்த கோப்புகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் அந்தக் கோப்புகள் கவனிக்கப்படாமல் நிலுவையில் கிடந்தன.

தமிழக அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலுவையில் போடப்பட்டுள்ள மசோதாக்கள், கோப்புகள் ஆகியவற்றை ஆளுநரும் முதல்வரும் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தது. இதை யடுத்து ஆளுநர் ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், ஆளுநர் அக்கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து 12 பேரை முன்விடுதலை செய்வதற்கான அரசாணையை தமிழக உள்துறை அமைச்சு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கடலூர் சிறையில் உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் என்ற உக்கிரவேல் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

கோவை சிறையில் உள்ள அபுதாகிர் என்ற அபு, விஜயன், கமல் என்ற பூரிக்கமல், ஹாரூண் பாஷா என்ற ஹாரூண், சாகுல்ஹமீது, பாபு என்ற உமைல் பாபு ஆகிய ஆறு பேரும், வேலூர் மத்திய சிறையில் இருந்த சீனிவாசன், சென்னை புழல் மத்திய சிறையில் இருந்த ஜாகிர் ஆகியோரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

நீண்ட நாள்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்பையில் மாநில அரசுகள் விடுதலை செய்வது வழக்கமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்