சென்னை: தெற்காசிய கல்வி மாநாட்டின் மூலம் வெளிநாடுகளில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை மேற்கொள்ள தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அந்தக் கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற கல்வி மாநாடு சென்னையில் நடைபெற்றது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருக்கும் உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்களின் திறன்களையும் கல்வியையும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள உயர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்கெனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் பயனாக, தைவான் நாட்டில் முழுமையான கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வியை மேற்கொள்ள தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளதாக அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
“ஒட்டுமொத்த இந்தியாவில் தேர்வான மூன்று மாணவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமையாக இருக்கிறது. தெற்காசிய கல்வி மாநாட்டில் பங்கேற்க தைவான், மலேசியா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
“ஏழு மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவர்களை இந்த நாடுகளுக்கு நான் அழைத்து சென்றேன். அப்போது அந்த நாடுகளில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித் தொகை குறித்து அவர்கள் விவரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“இதையடுத்து, தமிழகத்திலும் அனைத்து மாணவர்களும் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த மாநாடு இங்கு நடத்தப்படுகிறது,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

