தென்காசி: மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார்.
இன்ஸ்டகிராம் மூலம் அவதூறு பரப்பியதாக பள்ளி மாணவர்கள் பத்து பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அண்மையில் மாணவி ஒருவர் வீட்டுப் பாடத்தை முடிக்காததால் கண்டித்த ஜெயராஜ், பின்னர் பிரம்பாலும் அடித்துள்ளார்.
அப்போது அந்த மாணவி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பிரம்பைப் பயன்படுத்தாமல் கையால் அடிக்கும்படியும் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த மாணவியிடம் ஆசிரியர் ஜெயராஜ் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதுதான் புகார்.
மாணவியின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க, அதன் பேரில் ஆசிரியர் ஜெயராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டார். எனினும் அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் மாணவர்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஆசிரியர் ஜெயராஜ் மீது புகார் கூறிய மாணவி குறித்து இன்ஸ்டகிராமில் விமர்சித்து சிலர் பதிவிட்டதால் பரபரப்பு கூடியது. இதனால் புகார் அளித்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் ஜெயராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும், மாணவி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக பள்ளி மாணவர்கள் பத்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

