சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை யாரும் விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுக்கு பாஜகவின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் கொடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவதற்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக ஜெயக் குமார் கூறியுள்ளார்.
“பாஜக யாருக்கு வேண்டுமானாலும் கதவை திறந்து வைத்திருக்கட்டும். அதுகுறித்து அதிமுக கவலைப்படவில்லை. பாஜகவுடன் இனி எப்போதுமே கூட்டணி கிடையாது.
“பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள், மக்களின் நிலைப்பாடு. அதிமுக முன்வைத்த காலை பின் வாங்காது,” என்றார் ஜெயக்குமார்.
இதற்கிடையே, தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வந்தாலும் தங்கள் கூட்டணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் இந்த முடிவில் பாஜக தெளிவாக உள்ளது என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால், பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றுக்கொண்டு வரவேண்டும். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. இது அவரவர் முடிவு.
“கூட்டணி எப்படி இருக்கும், கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள், தலைவர்கள் குறித்து அடுத்து வரும் நாள்களில் அறிவிப்போம். அதற்கு கால அவகாசம் உள்ளது,” என்று அண்ணாமலை மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 18 பேரும் திமுக முன்னாள் எம்.பி. ஒருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

